வெள்ளி, 31 ஜனவரி, 2014

தாயுமானவன்-3

எனக்கு தெரிந்தவர்கள், ஐயா, கிரிமினல் லாயரா? இல்லை சிவிலா? என என் சின்ன வயதில் கேட்பார்கள். எனக்கு பதில் சொல்ல தெரியவில்லை. ஐயாவிடம் கிரிமினல், சிவில் அப்படின்னா என்னவென்று கேட்டேன்.
ஐயா, சொன்னார்கள்.  உதாரணமாக, ஒரே இடம் எனக்கு சொந்தமானது என இருவர் சொன்னால், அவர்கள் நீதி மன்றத்தை அணுகி, முறையாக நீதி பெற்றால், அது சிவில். அதே இடத்திற்காக, அவர்கள் நீதிமன்றத்தை அணுகாமல், அவர்கள் அடித்துகொண்டார்கள் எனில், அது கிரிமினல் என்றார்கள்.  அந்த வயதில், கிரிமினல் என்றால் எனக்கு அந்தளவில் தெரிந்தால் பொழுதும் என்று ஐயா சொன்ன பதில் எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது

ஐயா, சாப்பாடு விசயத்தில் விருப்பமானவர். தினம் ஒரு குழம்பு, ரசம்,கூட்டு, பொரியல், துவையல், ஒரு கீரை கட்டாயம் இருக்கனும். என்ன மழையானாலும், கீரை எப்படியாவது வாங்கி வருவார்கள். இல்லையெனில், வீட்டில் உள்ள முருங்கை கீரையாவது செய்யவேண்டும்.

ஐயாவிடம், சமையலில், எதுவும் தெரியவில்லை என சொல்ல முடியாது,
"சித்திரமும் கை பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்" என சொல்வார்கள்" ஒரு பெண்ணுக்கு சமையல் ரொம்பவும் முக்கியம், எதோடு, எது சேர்த்தல் ருசியை கூட்டலாம் என அறிந்து செயல் படனும் என்பார்கள். சமையலும் ஒரு கலைதான், விரும்பி செய்தால் சரியாக வரும். கடமைக்கு செய்யகூடாது என்பார்கள். ஐயா பிரியாணி செய்து தருவார்கள், அவ்வளவு அம்சமாக இருக்கும். ஏதும், விசேசம் என்றால் இலையில் சாப்பிடும் பொழுது, பரிமாறும் விதம் சொல்லி கொடுப்பார்கள்.

 
 
 ஐயா, அரசியலில் சிறிது காலம் பணியாற்றியபடியால், கொஞ்சம் பிரபலமாக பலருக்கு தெரியும், ஐயாவை, சில விழாக்களுக்கு மேடையில் பேச, தலைமை தாங்க அழைப்பார்கள், தலைப்பு கொடுத்தால் பொழுதும், அதற்காக தனியாக மெனக்கெட மாட்டார்கள். அப்படியே பேசிவிட்டு வந்துடுவார்கள்.  நீங்களும் நேரம் கிடைக்கும் பொழுது நிறைய புத்தகம் படியுங்கள், இணையத்திலே நேரம் கிடைக்கும் பொழுது படியுங்கள். இல்லை நிறைய விஷயம் தெரிந்தவர்களை நண்பர்களாக வைத்து கொள்ளுங்கள். கேள்வி ஞானம் வளரும்.
 

புதன், 29 ஜனவரி, 2014

தாயுமானவன்! - 2

ஐயா,  நாங்கள் சின்ன பிள்ளையாக இருக்கும் பொழுது தினமும் யோகா மற்றும் பூஜை செய்வார். இப்பொழுது பூஜை தொடர்ந்து செய்வார்.
காலை ஏழரை மணிக்கு குளித்து முடித்து பூஜை ரூமில் உக்கார்ந்தால், சிவ மந்திரம்

"சிவ சிவ என்கிலர் தீவினையாளர் சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்" 
என ஆரம்பித்து, கந்த சஷ்டி முழுவதும் பாட்டாக பாடுவார், அவர் பாடுவது அக்கம் பக்கம் வீட்டுக்கு கேக்கும். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பூஜை செய்வார். அந்த நேரத்தில் என்னையும், தம்பியையும் பூஜையில் உக்கார வைத்து பார்த்தார்கள். நாங்கள் ரெண்டு பெரும், பூஜையில் வைத்து கொடுக்கும் கல்கண்டு, திராட்சையை உத்து பாத்துகொண்டு இருப்போம். அப்புறம், நாங்க பூஜையில் கவனம் செலுத்துவதில்லை என் தெரிந்தபின், பூஜைக்கு அழைக்க மாட்டார்கள். ஆனால் பூஜை முடிந்ததும் கல்கண்டு, திராட்சை மட்டும் தவறாமல் கிடைக்கும் (இன்று வரை).

ஐயாவிடம், பயம் அதிகம் இருந்த படியால், அவர் நடமாடும் பொழுது, மரம் ஏறி மாங்கா பறிக்கறது, இந்த மாதிரி வேலை எல்லாம் பாக்கறதில்லை(ஐந்தாவது படிக்கும் பொழுது). ஆனா பூஜையில் இருந்தால் அந்த ஒரு மணி நேரம்..ஆட்டம் தான். ஐயாவின் பாட்டு தான் சிக்னல், பாட்டு சுரம் குறைய குறைய, பூஜை முடியும் நேரம் தெரிந்து,  அப்படியே சீட்ல வந்து உக்காந்து படிக்க ஆரம்பிச்சுடுவோம்.

அன்று அப்படி தான் மரம் ஏறிய சுவாரசியத்தில், பாட்டை கோட்டை விட்டு விட்டோம். பூஜை முடிந்ததும், நீர் விழாவிய, தண்ணிரை செடியிலொ, மரத்திலோ ஊற்றுவார்கள், அன்னைக்குன்னு பார்த்து, மாமரத்தில் மேலே ஊற்ற வர..மரத்தில் நானும், என் தம்பியும்.."ஐயோ" அப்படியே பக்கத்துக்கு வீட்டு மாடிக்கு தாவலம்னு பாத்தா, காலு எட்டல.."கடவுளே மேல பாக்காம தண்ணி உத்தகூடாதான்னு " நினைக்கங்காட்டியும், பாத்துட்டாக.

அம்புட்டுதான்.."வாங்க இங்க ரெண்டு பெரும்" கூப்புட்டாக..பெண் பிள்ளைகள் எங்கள அடிக்க மாட்டக. எப்பொழுதும், அண்ணன் தம்பிக்குத்தான் அடி விழும்..ஆனா அன்னைக்கு நான் மரம் ஏறியதுக்கு முதுகுல டின்னு கட்ட போராகன்னு பயந்துக்கிட்டே போனேன்"

ஹாலுக்கு போனதும், என் தம்பிக்கு ஒரு அடி முதுகுல, அப்படியே ஓடி போய் பயபுள்ள புத்தகத்த, தலை கீழ புடிச்சு(*நான் சிக்னல் குடுத்தத கவனிக்காம) படிக்க ஆரம்பிச்சுது, அதுக்கு ஒரு அடி.அப்புறம் என்ன எனக்கு அடி விழுந்துச்சான்னு? ரொம்ப சந்தோசமா, நீங்க படிக்கற மாதிரில்ல தெரியுது.

ஐயா, என் சடைய புடிச்சு இழுத்தாக, அம்புட்டுதான், கால சூட ஏதோ நனைச்சுது, குனிஞ்சு பார்த்தா, டான்க் பர்ஸ்ட் ஆயிடுச்சு. என்ன சிரிக்குறீங்களா!..நீங்க எங்க ஐயா கிட்ட இருந்த என்னல்லாம் வெடிச்சு இருக்குமோ? தெரியுமா?

நல்ல வேலை அடி விழழ. அப்புறம் அந்த கர்மத்த, நானே கழுவனும்னு சொல்லிபுட்டாக."பொம்பள புள்ள, கை கால் உடைஞ்சா உன்னைய எவன் கட்டுவான்னு" கேட்டாக.  அம்புட்டுதான், அப்புறம் மரம் ஏறுவது இல்லை.

ஐயா, நாங்கள் தேர்வு எழுதும் பொழுதெல்லாம் இந்த பாடலை தவறாமல் நினைவூட்டுவார்.

"மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார்
கருமமே கண்ணாயி னார் "
(குமரகுருபர சுவாமிகள் நீதிநெறி விளக்கம்)

பொருள்:
தம் உடம்பின் வருத்தத்தைக் கவனியார், பசியையும் கவனிக்காமல், கண்ணுறங்ங்காமல்,  யார் தீங்கு செய்தாலும் அதைப்பொருட்படுத்தாமல்  பிறர் செய்யும் அவமதிப்பையும் கருதாமல் தன குறிக்கோளை மட்டும் நினைப்பவர், வாழ்வில் முன்னேற்றம் அடைவர்.

எங்கள் வீட்டில் அனைவருமே ஓரளவு நன்றாக படித்தோம்.
எனக்கு வேலைக்கு போகும் எண்ணம் எல்லா சுத்தமாக இல்லை.

ஆனா ஐயாவுக்கு நான் Civil Service தேர்வாகி IAS or IPS ஆகணும்னு நினைத்தார்கள்(அவர் கனவு நிறைவேற வில்லை என்பதால் இருக்கலாம்)

 +2 குரூப் 1, கணிதம் ,அறிவியல் தேர்ந்தெடுத்து தேர்வாகியும் , +2 முடித்ததும், என்னை வரலாறு முக்கிய பாடமாக, எடுத்து கல்லுரி படிப்பை தொடர சொன்னார்கள். Group-1 முக்கிய பாடம் வரலாறு எடுத்தால் சுலபமாக இருக்கும்னு ஐயா நினைத்தார்கள்

ஐயா ஆசைப்படி, நானும் B.A(வரலாறு ) மட்டும் விண்ணப்பித்து இருந்தேன்(தஞ்சை குந்தவை நாச்சியார் கல்லூரியில்)

நான் இப்ப என்னவா இருக்கேன்னு, என்னைய பற்றி தெரிந்தவர்களுக்கு தெரியும். தெரியாத  நீங்கள் தாயுமானவன்-3 தொடரவும். ஹி ஹி




செவ்வாய், 28 ஜனவரி, 2014

வாழும் தேவதைகள்! - 1-அக்கா!


என் அக்காவின் இருபது வயது வரை, வேலை ஆள் உதவி மூலம் நாங்கள் வளர்ந்தோம். வேலை செய்தவருக்கு, சத்துணவு அமைப்பாளராக அரசு வேலை கிடைக்க, அக்கா கல்லூரி படிப்பு முடிந்து இருபது வயதில்,  எனது  பன்னிரெண்டாம் வயதில் அவர் குடும்ப பொறுப்பை சுமந்தார்.

பொறுமைக்கு, மறு பெயர். என் அக்கா!
தனக்காக அவர் எதுவுமே செய்தது இல்லை. வீடு, ஐயா, தம்பி, தங்கைகள் தான் உலகம் என வாழ்ந்தவர். அவர் தோழி Computer Centre வைத்து இருந்தார், அதன் மூலம் சுற்றுலா செல்லும் வாய்ப்பு என எது வந்தாலும் அக்கா என்னை அனுப்பி விடுவார், அவர் Computer கற்றுக்கொள்ள  ஆசை இருந்தும், அவர் சென்றால் சமயத்தில் நான் வீட்டு வேலை செய்ய வேண்டி வரும் என்பதால், என்னை வகுப்புக்கு அனுப்பினார்.

எந்த வேலையும் அவர் என்னை செய்ய சொல்ல மாட்டார், இழுத்துபோட்டுக்கொண்டு எல்லாம் செய்வார். அக்காவுக்கு, தூங்கறவங்கள எழுப்பினால் பிடிக்காது. நானாக எழுந்திருக்கும் வரை, எழுப்ப மாட்டார். வீட்டு வரவு செலவு கணக்குகளை, பைசா பாக்கியில்லாமல், தினம் தினம் எழுதி வைப்பார்(இன்று வரை)

அக்கா, தங்கை எல்லாம் சின்ன விசயத்திற்கும் சண்டை போடும் இந்த காலத்தில், என் அக்கா எனக்கு இன்னொரு அம்மாவாக இருந்து வழி நடத்தினார். ஆம் சமயத்தில் தெய்வங்கள் அம்மாவாக, அக்காவாக, மகளாகவும் நமக்கு அமையும். அது நாம் செய்த பாக்கியம்.



அன்பால் அரவணைத்தாய்..
பாசத்தால் பரவசபடுத்தினாய்..
நீ எங்களை பெற்று எடுக்காத தாய்..

நாங்கள் மேற்படி முன்னேற..
உன் மேற்படிப்பை துறந்தாய்..

உன் சந்தோசத்தை..
எங்கள் முகத்தில் பார்க்க ஆசைபட்டாய்!

எங்கள் கருப்பு வெள்ளை கனவுகளுக்கு..
உன் எண்ணத்தை  வண்ணங்களாய் .. அள்ளி தந்தாய்..

உனக்கு, என் நன்றியை சொல்ல..
இந்த ஜென்மம் போதாதம்மா..

இன்னொரு மனித ஜென்மம் எடுக்க வேண்டும்..
நீ என் மகளாக பிறக்க வேண்டும்.
நான் உன் தாயாக வேண்டும்.

என் அக்கா மாலாவிற்கு.. இந்த பதிவு சமர்ப்பணம்..


WE MISS YOU MANI(MALA) AKKA!


திங்கள், 27 ஜனவரி, 2014

தாயுமானவன்!-1

நாங்கள் ஐந்து பிள்ளைகள், பதினோரு வயது என் அக்கா, ஒன்பது மற்றும் ஐந்து வயதில் இரண்டு அண்ணன்கள், மூன்று வயதில் நான், மற்றும் ஒன்றரை வயதில் என் தம்பி, என் அம்மா இந்த உலகத்தை விட்டு சென்ற பொழுது. ஒரே நாள் வாந்தி மயக்கம், ஜீரம் என ஆஸ்பத்திரி போனவர், மறு நாள் திரும்ப பிணமாகத்தான் வந்தார்கள். காலனுக்கு காரணம் தேவை இல்லையே.

என் அம்மாவின் இறுதி சடங்கிற்கு வந்தவர்கள், எங்களை பார்த்து கதறி அழுததாக அக்கா சொல்வார்கள். அதெல்லாம் எனக்கு எதுவுமே தெரியாது. என் அப்பா, நாங்கள் சிறு வயதில் இருக்கையில் திருமணம் செய்தால், மறுதாரம் எங்களை கொடுமைபடுத்தினால் என்ன செய்வது என நாங்கள் வளரும் வரை (பத்து வருடம் கழித்து திருமணம் செய்தார்) மறுமணம் செய்யவில்லை. ஐயாவிடம் ரொம்ப மரியாதை, நேரே உக்காந்து நான் பேசியதே இல்லை.

அப்பா, IAS தேர்வில் முதல் கட்டம், தேர்வாகி முக்கிய தேர்வில் தேர்வாகவில்லை(அப்பா எங்களிடம் இது வரை காட்டி கொண்டதே இல்லை), ரொம்ப அறிவாளி என தாத்தா சொல்வார்

அப்பாவுக்கு, திருக்குறள் மேல் உள்ள அவர் ஆர்வம் என்னை வியக்க வைக்கும்.

தாத்தா அவரை சட்டம் படிக்க வைத்தார். என் அப்பா உயர் நீதிமன்ற வேலையாக சென்னை செல்வார், திரும்ப வந்ததும் என்ன வாங்கி வந்து இருக்கிறார் என ஆர்வமாக பெட்டியை பார்த்தால், புத்தமாக நிறைந்து இருக்கும். எங்களுக்கு ஏமாற்றமாய் இருக்கும். அப்பாவுக்கு, புத்தகம் என்றால் கொள்ளை பிரியம்.

திருப்புகழ்
தேவாராம்
சுய முன்னேற்ற புத்தகங்கள்
அறிவியல் ஆராய்ச்சி
நபிகளின் பொன் மொழிகள்
ஏசுபிரானின் பொன்மொழிகள்
சித்த வைத்தியம்
கை வைத்தியம்

என எல்லா பிரிவுகளிலும் புத்தகம் அடுக்கி இருக்கும். எங்கள் வீட்டு வரவேற்பறையில், சிறிய புத்தக நிலையமே இருக்கிறது. எங்களை அடிக்கடி "படிங்க..படிங்க "என்பார்..இம்கும்..நாங்கெல்லாம் இப்பயே அப்படி...அப்ப கேக்கவா வேணும். இருந்தாலும் நேரம் கிடைக்கும் பொழுது சிறிது படிப்பேன்.

மதம் தாண்டி அவர் எண்ணங்கள் இருக்கும், நபிகளின் பொன்மொழிகள் என்னை மிகவும் கவர்ந்தவை,

"கூலியாளின் வியர்வை உலருவதற்கு முன் அவருடைய கூலியை கொடுத்துவிடுங்கள்."

"தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்கிறது."

"பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்."

"குத்துச்சண்டையில் அடுத்தவனை வீழ்த்துபவன் வீரன் அல்ல. மாறாக, கோபம் வரும் போது தன்னைத்தானே அடக்கி கொள்பவனே வீரன் ஆவான்."

" தந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில் மிகச் சிறந்தது அவர்களுக்கு அளித்திடும் நல்ல கல்வியும், நல்லொழுக்க பயிற்சியும் ஆகும்."

"தன் பக்கத்தில் இருக்கும் அண்டை வீட்டார் பசித்திருக்க தான் மட்டும் வயிறார உண்பவர் ஓர் இறைநம்பிக்கையாளராய் இருக்க முடியாது."

இவையெல்லாம் என் தந்தை, புத்தகம் மூலமாக எனக்கு கற்று கொடுத்தவை.

எனக்கு பிடித்த ஏசுபிரானின் பொன்மொழிகள்,

"உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்."

"உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்."

" உங்களை துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்."

" மற்ற மனிதர் செய்யும் குற்றங்களை நீங்கள் மன்னிப்பீர்களானால் உங்கள் விண்ணகத் தந்தையும் உங்களை மன்னிப்பார்."

"மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள் முன் உங்கள் அறச்செயல்களைச் செய்யாதீர்கள்." - என்னை சிந்திக்க வைத்த பொன்மொழிகள்

அப்பா மூன்று மணி நேரம் கூட தூங்க மாட்டார். எப்பொழுதும் படித்து கொண்டே இருப்பார். "கற்றது கை மண் அளவு ..கல்லாதது உலக அளவு" என்பார்.

நீங்கள், உங்கள் பிள்ளைக்கு அளிக்கும் மிக உயர்ந்த பரிசு, ஒரு நல்ல புத்தகமாக இருக்கட்டும். காலத்திற்கும் அழியாத பரிசாகவே இருக்கும்.

நான் படித்த அதே புத்தகம் நாளை என் மகள் படிப்பாள். தலைமுறை தொடரும்.

இரவல் கொடுத்த நிறைய புத்தகம் திரும்ப வரவில்லை.

நீங்கள் ஒரு புத்தக பிரியர் எனில், புத்தகம் மட்டும் இரவல் கொடுத்தால், உடனே  வாங்கி விடுங்கள். இல்லை எனில், சாதுர்யமாக  தவிர்த்து விடுங்கள். வீட்டிலே வந்து படித்துவிட்டு போக சொல்லுங்கள்.

தாயுமானவன்!

தூக்கம் மறந்த வேளையிலே..
கதை..சொல்லி..தூங்க வைத்தான்..
அவன் தாயும்... அல்ல..

கைபிடித்து ..
வழி நடத்தினான்..
அவன் என் பாதுகாவலனும் அல்ல..

படிக்க மறந்த வேளையிலே..
கல்வி கற்று கொடுத்தான்..
அவன் என் ஆசானும் அல்ல..

கஷ்டம் வந்த வேளையிலே..
கை கொடுக்க ஓடி வந்தான்..
அவன் கடவுளும் அல்ல..

கடைசிவரை நான் இருக்கேன் என்றான்
என் காதலனோ.. கணவனோ..அல்ல..

அவன் எல்லாவற்றிற்கும் மேலானவன்..
என் தகப்பன்... அவன் எனக்கு தாயுமானவன்..

அப்பாவை ஐய்யா என அழைக்க சொல்லி எங்க அம்மா சொன்னதாக அக்கா சொல்வார். இன்றும் ஐய்யா என்று தான் அழைப்போம்.

ஐயா உங்களுக்கான பதிவு இது

I MISS YOU AYYA!

அக்கா, நீ ஊருக்கு போகும்போது அய்யாவுக்கு, இந்த பதிவை காட்ட வேண்டும்.

சனி, 25 ஜனவரி, 2014

துரை தாத்தா!

என் தாத்தாவிற்கு ஐந்து பிள்ளைகள் பிறந்து இறந்த பின், என் தந்தை பிறந்ததாக தாத்தா சொல்வார், என் பாட்டி பதினோராவது பிள்ளை பிறக்கும் பொழுது கருப்பை வெடித்து(என்ன கொடுமை!) இறந்ததாக என் தாத்தா சொல்வார்.

எங்கள் ஊரில் ஒரு பழக்கம், (உங்கள் ஊரிலும் இருக்கலாம்) இறந்த நாள் அன்று, இடுகாட்டுக்கு சென்ற உற்றார் உறவினர், இறந்தவர் வீட்டில் அன்று இரவு சாப்பிடுவார்கள்.

அப்படி என் தாத்தா உறவினருடன் அமர்ந்து சாப்பிடும் பொழுது, சாம்பாருக்கு நெய் கொண்டு வரும்படி கேட்டாராம். என் தாத்தா தன சாப்பாட்டு ருசியை அன்று கூட விட்டு கொடுக்க தயாராக இல்லை என்பது தான் உண்மை. என் உறவினர்கள் இன்றும் ஆச்சரியப்படும் விசயம் இது. எனக்குள் எழுந்த கேள்விகள்,

என் பாட்டியின் பதினைந்து வருட தாம்பத்தியம் எப்படி இருந்து இருக்கும்?

என் தாத்தா, என் பாட்டியை பிள்ளை பெற்று கொடுக்கும் இயந்திரமாகத்தான் பார்த்தாரா?

இன்றும் மனைவியை,  இயந்திரமாக பார்க்கும் ஆண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.  இன்றும் தன் பெற்றோர், மனைவி, பிள்ளைகளிடம் கலந்தாலோசிக்காத ஆண்கள், தனது முடிவே சரியென நினைப்பவர்கள்  இருக்கத்தான் செய்கிறார்கள்.

இவ்வாறான ஆண்கள் எதிர்பாராத விதமாக வகையில், அவர்கள் இல்லாத சூல்நிலையில் அந்த குடும்பம் திக்கு முக்காடி போகும்.

அதுவும் கடன் கொடுக்கல், வாங்க இருப்பின், அந்த குடும்பத்தின் நிலைமையை கேட்கவே வேண்டாம். அவர்களை ஏமாற்ற ஒரு கூட்டம் காத்து கொண்டு இருக்கும்.

உங்கள் மனைவி, உங்களுக்கு பின் உங்கள் குடும்பத்தை அவர் தான் காப்பாற்ற வேண்டும்((நீங்கள் நம்பினாலும், நம்பா விட்டாலும் இதுதான் உண்மை), இதற்க்கு உங்கள் மனைவியை தயார் படுத்தி வைத்து இருக்குறீர்களா?

பெண் பிள்ளைகளை வளர்க்கும் பொழுது அவர்களுக்கென்று தனித்தன்மை ஏற்படும் வகையில் வளருங்கள். அப்படி வளர்ந்த பிள்ளைகள் விவரம் தெரிந்தவர்கள் இருப்பார்கள். உங்கள் மனைவி வெளி உலகம் தெரியாமல் வளர்ந்தவர் ஆயின், உங்களை திருமணம் செய்த பின்னும் வெளி உலகம் தெரியாமல் இருக்கிறார் எனில்,அதற்க்கு  நீங்கள் தான் பொறுப்பாளி.

அதற்க்கு என்னவெல்லாம் செய்யலாம்,

உங்கள் மனைவி, நீங்கள் இல்லாத சூல்நிலையிலும்,தன்னம்பிக்கையோடு ,  தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என நினையுங்கள்.

உனக்கு ஒன்றும் தெரியாது, பேசாம வேலைய பாரு என ஒதுக்கி விட்டு வேலையை பார்க்காதீர்கள். அவருக்கு புரியும்படி கற்று கொடுங்கள். அவர் அதற்கெல்லாம் லாயக்கு இல்லை என்று நீங்களே  முடிவு செய்யாதீர்கள்.

வங்கி பரிமாற்றமோ, உங்கள் குழந்தைக்கு பீஸ் கட்டுவதோ, சிறு சிறு வேலைகளை அவர்களை விட்டு செய்ய சொல்லுங்கள்.

உங்கள் மனைவி விபரம் தெரிந்தவர் ஆகிவிட்டால் உங்களுக்கு மரியாதை இருக்காது என நீங்களே முடிவு செய்யாதீர்கள். அவர் உங்கள் மனைவி, உங்களுக்கான கௌரவத்தை எந்த நிலையிலும் விட்டு கொடுக்க மாட்டார். உங்களுக்கு வேண்டியது எல்லாம் நம்பிக்கைதான்.

பணம் கொடுக்கல் வாங்கல் விசயத்தை, உங்கள் நம்பக தகவல்களை, சிலர் ஈமெயில்-ல் வைத்து இருப்பீர்கள், இருப்பினும்ஒரு குறிபேட்டில் எழுதி வையுங்கள். வாங்கிய நாள், திருப்பி கொடுத்த நாள் அனைத்தையும் எழுதி வையுங்கள். அதை உங்கள் மனைவியிடம் கொடுத்து வையுங்கள்.

நீங்கள் உங்கள் பண பரிமாற்றம் விஷயம் அனைத்தும் உங்கள் மனைவிக்கு தெரியும் என்ற விசயத்தை பணம் வாங்குபவர்களுக்கு மறைமுகமாக தெரிவியுங்கள். பின்னாளில், உங்கள் குடும்பம் ஏமாறாமல் இருக்க வசதியாக இருக்கும்.

மனிதம் வளர்ப்போம். எங்கும் சந்தோசம் நிறையட்டும்.

"நல்லதொரு குடும்பம் ஒரு பல்கலை கழகம்" என நான் சொல்லியா உங்களுக்கு தெரிய வேண்டும்.
 

வெள்ளி, 24 ஜனவரி, 2014

புனிதா அக்கா!

புனிதா அக்கா!

என் தந்தையின் நண்பரின் மகள்..
அழகும் அறிவும் ஒன்றாக அமைய பெற்றவள். வாரம் ஒரு முறையாவது அக்காவை பாக்கணும். ஏன்  தெரியுமா? பாதம் வரை முடிவளர்ந்த பெண்கள் நிறைய பேர் இருக்கலாம்.

நான் பார்த்த முதல் பெண், புனிதா அக்கா.  பார்க்காத இன்னொரு பெண் என் அம்மா( புகைபடத்தில் இருப்பவர்),


என் மூன்று வயதில்  உலகத்தை விட்டு பிரிந்தவர், என் அக்கா பதினோரு வயதில் என் அம்மா இறந்ததால். என் அக்காவிடம் அம்மாவை பற்றி நிறை கேள்விபட்டு இருக்கிறேன். என் கேள்விகள் சுத்தி, சுத்தி இந்த நீண்ட முடியை பற்றியே இருக்கும்..அம்மா எப்படி தலை குளிச்சு துண்டு கட்டுவார்கள்?.அப்படி இப்படி என. அம்மா அழகு என அக்கா சொல்வார்கள்.

அந்த நீண்ட முடியை கொண்ட அக்காவை பாக்கும் பொழுது என் அம்மாவை காண்பது போல் உணர்வு. அதான் வாரம் ஒரு முறையாவது புனிதா அக்காவை பார்க்கணும். அக்காவிற்கு முடியை பராமரிப்பதில் அத்தனை ஆர்வம், அவரோட உயிர் என்றே சொல்லலாம். அக்கா ஆங்கில இலக்கியம் படித்தவர். அழகா ஆங்கிலத்தில் உரையாடுவார். அவரின் தந்தை வீட்டிலே பிள்ளைகளிடம் ஆங்கிலத்தில் பேசுவார். என் தாத்தா தமிழ் புலவர் என்பதால் எங்கள் அனைவரையும் தமிழ் வழி வகுப்பில் சேர்த்தார்கள். அதனால் அக்கா பேசுவதை வாயைபிளந்து பார்த்து கொண்டு இருப்பேன். புனித அக்கா குடும்பத்தோடு அவர்கள் சொந்த ஊருக்கு(தஞ்சை பக்கம் ஒரத்தநாடு) திருவிழாவுக்கு போகும்பொழுது, அவரை பார்த்த அவர்களது தூரத்து உறவினர் திருமணம் செய்ய பெண் கேட்டு வந்தார்கள். அக்கா மூன்றாம் வருடம் கல்லூரி படிப்பில் இருந்ததால், அவர்கள் வீட்டில் திருமணத்திர்க்கு ஆயத்தமாக இல்லை. மாப்பிள்ளை வீட்டார் பிடிவாதமாக இருந்ததால், நல்ல இடம் என புனிதா அக்காவை திருமணம் செய்து வைத்தார்கள்.

திருமணதிற்கு பின் அக்கா மறு அழைப்பிற்கு வந்த பொழுது, சில உண்மைகளை சொன்னார்கள். அதாவது அவரின் மாமியாருக்கு மகள் வழி பெண்ணை தன் மகனுக்கு திருமணம் செய்து வைப்பதாக இருந்ததாகவும், அக்கா தன அழகை காட்டி அவர் பையனை மயக்கி விட்டதாகவும் வார்த்தைக்கு வார்த்தை  பேசுகிறார்கள். என் கணவரிடம் சொன்னால், கொஞ்ச நாள் போனால் சரியாகி விடும் என்கிறார்" என சொல்லி அழுதார்கள்.

அதற்க்கு பிறகு அக்காவிற்கு நிறைய சோதனைகளை கடக்க வேண்டி இருந்தது. அக்காவிடம் அவர் மாமியார் நிறைய வார்த்தைகள் விட, அவரும் திரும்ப பதிலடி  கொடுக்கும் நிலைமை. "அழகாய் இருக்கும் திமிர்" என அடிக்கடி வார்த்தைகளால் சுட்டெரித்து கொண்டு இருந்திருக்கிறார்.

அக்காவின் பிரார்த்தனை "அவர் மாமியாரின் பேத்திக்கு(கணவரின் சகோதரி மகள் ) நல்ல வரன் அமைந்து, நல்லபடி இருக்கணும்"  என்பதே.

அவர் கணவரும் அம்மா பிள்ளை என்பதால் தப்பை தட்டி கேட்க்கும் தைரியம் இல்லை.

அக்காவிற்கு அழகாய் ஆண் குழந்தை, அடுத்து ஒரு பெண் குழந்தை பிறந்தது. அவர் ஊர்க்கு வரும்பொழுது அவரை தவறாமல் போய் பார்ப்பேன்.

ஒரு முறை அக்காவிற்கு உடம்பு சரியில்லை ஊருக்கு வந்து இருக்கிறார்கள் என்றார்கள்.என்னவென்று கேட்டபோது எதோ சண்டையில், அக்கா, மாமியாரிடம் நியாயம் கேட்க, அன்றே அவர் தூங்கி கொண்டு இருந்த பொழுது இரவில் அவரது அந்த நீண்ட முடியை அறுத்து விட்டதாகவும் "அழகாய் இருப்பதால் தானே திமிர்" என அவரை அடக்க அவர் அந்த மாமியார் எனும் மிருகம் கையாண்ட விதமும், அதற்க்கு பிறகு  அக்காவிற்கு சிறிது மனநலம் பாதிக்கப்பட்டதையும் கேட்ட என் ஒட்டு மொத்த நாடியும் அடங்கி போனது. கடவுளே, எனக்கே இப்படி என்றால் அக்காவிற்கு எப்படி இருக்கும்?

அதற்க்கு பிறகு
நான் அக்காவை பார்க்கவே இல்லை..பார்க்கும் தைரியமும் இல்லை..

அக்கா குழந்தைகளை எண்ணி அவர்களுடனே வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஆம் அவர் வாழ்ந்து காட்டவேண்டும்.

முடிதானே இதில் என்ன இருக்கிறது என நீங்கள் கேட்டால் உங்களுக்கான பதிவு இது இல்லை.

எனக்கு எழும் கேள்வி,

அந்த மாமியாரின் மகன் தன் விருப்படி திருமணம் செய்ததால்
அக்காவுக்கு ஏன் இத்தனை கொடுமை?

தான் விரும்பிய மனைவி திருமணம் செய்யும் அளவு பிடிவாதமாய் இருந்த அந்த கணவன், மனைவியை கடைசிவரை சந்தோசமாக வைக்க ஏன் நினைக்கவில்லை? இந்த அளவு கொடுமையை அனுமதிப்பது ஏன்? இவர்களுக்கெல்லாம் திருமணம் எதற்கு?

தன் வீட்டுக்கு வரும் மருமகள், தன் மகள் என நினைக்கும் மாமியார்களும், மாமியாரை தன் தாய் போல் பாவிக்கும் மனதை பெண்கள் கொண்டால் என்றுமே பெண்ணினம் பேசப்படும்.

நீங்கள் திருமணம் ஆனவரோ, திருமணதிற்காக பெண் தேடுபவரோ உங்களுக்கு நான் சொல்வது இது தான்,

அவள் உங்கள் மனைவி, உங்களையே உலகம் என எண்ணி வாழ்பவள், என்றும் அவளை கலங்க வைக்காதீர்கள்.


எங்கும் சந்தோசம் நிறையட்டும்.

ஜெய்ப்பது நிஜம்!

உணர்வுகளை  கட்டுபடுத்துவதில் தான் நாம் மிருகங்களிடமிருந்து வேறுபடுகிறோம் என்பது உங்களுக்கு தெரியும்

நம்முடனே வாழும் மிருங்கங்களினால் ஏற்படும்
வஞ்சம்,
துரோகம்,
துன்பம் இவைகளை பொறுமையாய் கடப்பதில் மூலம் நாம் வாழ்வில் ஜெயிப்பது நிஜம்.

மன்னிப்பது நல்ல குணம்..
மறப்பது தெய்வகுணம்..கேள்விப்பட்டு இருப்பீர்கள்

விட்டு கொடுத்து, மன்னித்து விட்டு வாழும் பெண் தெய்வங்களால் தான் இன்றும் பல குடும்பங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறது. இல்லையெனில் பல குடும்பங்கள் தலை எடுக்காமல் போயிருக்கும்.

அனைவருக்குமே திருந்த மறு வாய்ப்பு கிடைப்பதில்லை. ஆணோ, பெண்ணோ உங்களுக்கு திருந்த வாய்ப்பு  கிடைத்து இருந்தால். இப்பொழுதே திருந்தி விடுங்கள்.இல்லை நீங்கள் ஏதும் தவறு செய்பவர்கள் எனில் இதை படிக்கும் பொழுதாவது திருந்தவாது முயற்சி செய்யுங்கள். இல்லை இந்த சமுகம் உங்களை கல்லால் அடிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.

திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம் எனும் நிலையில் அவர்களுக்கான தண்டனை கிடைக்கும் வரை ஓய கூடாது.

நமது இந்திய பண்பாடு மற்றும் பழக்க வழக்கங்கள் இன்றும் உலக அளவில் பெருமையாய் பேசப்படும் அளவில் இருப்பதில் நமது அனைவருக்குமே பெருமை. அதுவும் தமிழ்  பண்பாட்டை கட்டி காப்பதில் நம் தமிழர்களுக்கு மிகவும் அக்கறை உண்டு என்பதை நம் சமுகத்தின் மூலம் நான் அறிவேன்.

என் பதிவை படிக்கும் உங்கள் மனதில்,
நேர்மறையான சிந்தனை,
இந்த சமூகத்திற்கு ஏதேனும் நல்லது செய்யனும்
இந்த பிறவி பயனை நல்லபடியா கடக்குனும்னு ஏதேனும் ஒன்று உங்கள் மனதில் உதித்தால் நான் பிறந்த பயனை அடைந்துவிட்டதாக உணர்வேன்.

தஞ்சையில் பிறந்தவள்..தமிழ் மண்ணின் சுவாசத்தை அறிந்தவள்..

உங்கள் ஆதரவு என்னை ஊக்கபடுத்தும். நிறைய எழுதனும்னு ஆசை ..பார்க்கலாம்!!!

புதன், 15 ஜனவரி, 2014


ஸ்ரீ குரு கீதை ...





எவர் குருவோ அவர் சிவன், எவர் சிவனோ அவர் குரு
குருவைக் காட்டிலும் அதிகமான தத்துவம் இல்லை
குருவைக் காட்டிலும் அதிகமான தவம் இல்லை
குருவைக் காட்டிலும் அதிகமான ஞானம் இல்லை
குரு மந்திரத்திற்கு எதுவும் சமம் இல்லை
குருவிற்கு சமமான தெய்வமும் இல்லை
குருவிற்கு சமமான உயர்வுமில்லை
சிருஸ்டி, இஸ்திதி, சம்ஹாரம், நிக்ரஹம், அனுக்ரஹம் இந்த ஐந்து வகையான செயல்கள்எப்பொழுதும் குருவிடம் பிரகாசித்து கொண்டேஇருக்கும்
தியானத்திற்கு மூலம் குருவின் மூர்த்தி
பூஜைக்கு மூலம் குருவின் பாதம்
மந்திரத்திற்கு மூலம் குருவின் வாக்கியம்
முக்திக்கு மூலம் குருவின் கிருபை
*************************************************************************

மகா பெரியவா அருள்வாக்கு

* இதயமே கடவுளின் இருப்பிடம். அதன் தூய்மையை காப்பது நம் கடமை.

* தினமும் காலையில் ஐந்து நிமிடமாவது இஷ்ட தெய்வத்தின் திருவடிகளை மனதில் தியானியுங்கள்.

* உண்ணும் உணவை கடவுளுக்கு நன்றியுடன் அர்ப்பணித்து விட்டு, பிரசாதமாக சாப்பிடுங்கள்.

* ஒழுக்கத்தை உயிராக மதியுங்கள். ஒழுக்கமுடையவன் ஈடுபடும் எந்தச் செயலிலும் அழகுணர்வு மிளிரும்.

* கடவுள் நமக்கு சக்தியும், புத்தியும் கொடுத்திருக்கிறார். அதன் மூலம் நல்லதை மட்டுமே செய்ய வேண்டும்.

“நம்ம வீடுகளுக்கு யார் வந்தாலும், அவாளுக்கு வயறு நன்னா நெறையற மாதிரி, முகம் சுளிக்காம, சந்தோஷமா சாப்பாடு போட்டாலும்,தர்மம்ன்னு யார் வந்தாலும் நம்மால முடிஞ்சதை தாராளமா குடுத்தாலும்….இகலோக சௌக்யமும் பரலோக சௌக்யமும் நிச்சயமா கெடைக்கும்!..”

- காஞ்சிப்பெரியவர்
நன்றி - rightmantra.com

*******************************************************************
வணக்கம்!
என் வாசல் வரை வந்த உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

என் வாழ்வில் சந்தித்த சாதாரண மனிதர்களின் சிறந்ததொரு பக்கத்தை உங்களிடம் பகிர போகிறேன்.

என் படைப்பு நிச்சயம் உங்களை..
சமயத்தில் சிந்திக்கவும்..
சமயத்தில் சிரிக்கவும் வைக்கும்.

என் முகவரி தேடி வந்த உங்களில் யாரேனும் ஒருவருக்கேனும் சின்னதா நேர்மறையான மாற்றம் நிகழ்ந்தால் நான் வெற்றி அடைந்து விட்டதாக சந்தோஷப்படுவேன்.

ஆசிர்வதிக்கப்பட்டவள்!

என் உறவினரோ, என் நண்பரோ இல்லாத நீங்கள் என் முகவரி தேடி வந்து இருந்தால் நான் ஆசிர்வதிக்கப்பட்டவள் தானே!

என் வாழ்வில் புயல் வீசும் தருணத்திலும், ஆலமர நிழலில் ஊஞ்சல் ஆடிக்கொண்டே உங்களுடன் பேசும் மன நிலையில் நான் இருக்கேன் என்றால் நான் ஆசிர்வதிக்கபட்டவள் தானே!

எனக்கு பிடித்த மகாகவி பாரதியின் வரிகள்,

"தேடி சோறு நிதம் தின்று
பலசின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம்வாடி துன்பம் மிக உழன்று
பிறர்வாட பல செயல்கள் செய்து
நரைகூடி கிழப் பருவம் எய்தி -
கொடும்கூற்றுக்கு இரையென மாயும்
பலவேடிக்கை மனிதரை போலே
நான்வீழ்வேனென்று நினைத்தாயோ?"

எனக்கு பிடித்த பாடல் வரிகள்..(படம்: சத்தம் போடாதே)

பேசுகிறேன் பேசுகிறேன்
உன் இதயம் பேசுகிறேன்
புயல் அடித்தால் கலங்காதே
நான் பூக்கள் நீட்டுகிறேன்

எதை நீ தொலைத்தாலும்
மனதை தொலைக்காதே
அடங்காமலே அலை பாய்வதேன்
மனம் அல்லவா

பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்
புயல் அடித்தால் கலங்காதே நான் பூக்கள் நீட்டுகிறேன்

கடல் தாண்டும் பறவைக்கெல்லாம்
இளைப்பார மரங்கள் இல்லை
கலங்காமாலே கண்டம் தாண்டுமே

முற்றுபுள்ளி அருகில் நீயும்
மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால்
முடிவென்பதும் ஆரம்பமே

வளைவில்லாமல் மலை கிடையாது
வலி இல்லாமல் மனம் கிடையாது
வருந்ததே வா

அடங்காமலே அலை பாய்வதேன்
மனம் அல்லவா

காட்டில் உள்ள செடிக்களுகெல்லாம்
தண்ணீர் ஊற்ற ஆளே இல்லை
தன்னை காக்கவே தானாய் வளருமே
பெண்கள் நெஞ்சில் பாரம் எல்லாம்
பெண்ணே கொஞ்சம் நேரம் தானே
உன்னை தோண்டினால் இன்பம் தோன்றுமே
விடியாமல் தான் ஒரு இரவேது
வடியாமல் தான் வெள்ளம் கிடையாது

வருந்தாதே வா

பிடித்த வசனம்(படம்: வீரம்)
நம்ம சுத்தி இருக்குறவங்கள நாம நல்லபடியா
பாத்துகிட்டா ..கடவுள் நம்மள பாத்துக்குவான்..

பிடித்த திருக்குறள்:
குறள்: 314 :
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன் நயம் செய்து விடல்.

Inspired Quotes

We should not give up and we should not allow the problem to defeat us.
- Abdul Kalam
You have to dream before your dreams can come true.
- Abdul Kalam