சனி, 3 ஜூன், 2017

நீங்கள் ஒரு பெண்...

நீங்கள் ஒரு பெண், உங்களை யாரும் கடத்தவில்லை.

உங்களை கட்டிலில் படுக்க வைத்து இருக்கிறார்கள். ஒருவர் உங்கள் ஆடைகளை களைந்து, உங்களை நிர்வாண படுத்துகிறார். நான்கு பேர் வருகிறார்கள், உங்களை யாரும் காயபடுத்தவில்லை. ஆனாலும்  உங்கள் உடம்பை தொட்டு, எங்கேயும் காயம் இருக்கிறதா  என பார்க்கிறார்கள். ஒருவர் கையில் கேமரா இருக்கிறது, நடப்பவற்றை பதிவு பண்ணுகிறார்.

என்ன தூக்கி வாரி போடுகிறதா?

நீங்கள் தற்கொலை பண்ணி விட்டீர்கள். ஆத்திரத்தில் எடுத்த முடிவு.







சம்பவம் 1:  குழந்தை பள்ளிக்கு செல்ல Uniform எடுத்தால், எல்லாம் அழுக்காக இருக்கிறது, வீட்டில் இருக்கும் மனைவி, அதை கூட கவனிக்காமல் என்ன பண்ணுகிறார், என  கோவத்தில் "இதை கூட கவனிக்காத நீ, இருந்து என்ன?" என கேட்கிறார்.  மாலை அலுவலகம் விட்டு திரும்ப வரும்பொழுது, மனைவி விஷம் சாப்பிட்டு இருந்து விட்டார். ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் அனாதையாக விடப்படுகிறார்கள். அவர்கள் பட்ட கஷ்டம் நான் சொல்லி உங்களுக்கு புரிய வேண்டியதில்லை.

சம்பவம்:2  மனைவி, கணவனின் மீது மிகவும் அன்பு கொண்டவர், மிகவும் ஆசை மிக்கவர். எந்த பெண்ணிடம் பேசினாலும் பிடிக்காது. மனைவியின் எதிர்ப்பை மீறி ஒரு பெண்ணிற்கு  (வழி தெரியாமல், அவர்கள் செல்லும் திருமணத்திற்கு செல்லும் பெண்ணிற்கு) lift கொடுக்கிறார். மனைவியும் கூடவே வருகிறார், மனைவியால் தனது ஆத்திரத்தை அடக்க முடியவில்லை. வீட்டிற்கு வந்ததும் தூக்கு மாட்டி இருந்து விடுகிறார்.  ஒரு ஆண், ரெண்டு பெண் குழந்தைகள். அன்னையின் அன்பிற்கு ஏங்கி தவிக்கிறார்கள். யார் வந்து அவர்கள் துயரை போக்குவது?

உங்கள் அன்புக்குரியவரை கலங்க விடாதீர்கள். உங்கள் பிள்ளைகள் அனாதையாகி விடுவார்கள். உங்கள் அன்புக்குரியவரை கேள்வி கேட்டு கொன்று விடுவார்கள். அவர் உங்களை கொலை செய்ததாய் சந்தேகபடுவார்கள்.உங்கள் இறப்பிற்கு காரணம் என்னவென்று, உங்கள் உடம்பை கூறு போட்டு பார்ப்பார்கள்,   அவசரத்தில் நீங்கள் எடுக்கும் முடிவு, உங்கள் குடும்பத்தை பாதிக்கபடக்கூடாது. வலி தற்காலிகமானது. கடந்து போய்விடும். தற்கொலை நிரந்தரம். உங்களால் மீண்டும் ஓர் வாழ்க்கை வாழ முடியாது.

குழந்தையை ஒரு அம்மா இருந்து பார்ப்பது போல் உலகத்தில் யாரும் பார்க்க கவனிக்க முடியாது. உங்கள் உயிரை எடுக்க யார் அதிகாரம் குடுத்தது?

இதை படிப்பவர் ஒரு ஆணாக இருப்பின்,  உங்கள் மனைவி, உங்களுக்காகவே வாழ்பவர், தெரியாமலும் அவர் மனதை காயப்படுத்தாதீர்கள். அவர் எடுக்கும் ஆபத்தான முடிவு,  உங்கள் எதிர்காலத்தை கலங்க வைத்துவிடும்.

பேச்சில் கவனம் இருக்கட்டும், கண்டிப்பில் கனிவும் இருக்கட்டும். வார்த்தைகளை விட்டு விடாதீர்கள். அதற்க்கு வலி அதிகம்.
இந்த உலகம் அன்பினாலும், அன்பானவர்களாலும் சூழப்பட்டது. துன்பம் வரும் நேரத்தில், அவர்களை நினைத்து அவர்களுக்காக வாழுங்கள்.  உங்களுக்காக துடிக்கும் இதயங்களை கண்ணீரில் மிதக்கவிட்டு சுயநலமாக என்றும் முடிவு எடுக்காதீர்கள்.



நன்றி.

Image Courtesy: Web