புதன், 29 ஜனவரி, 2014

தாயுமானவன்! - 2

ஐயா,  நாங்கள் சின்ன பிள்ளையாக இருக்கும் பொழுது தினமும் யோகா மற்றும் பூஜை செய்வார். இப்பொழுது பூஜை தொடர்ந்து செய்வார்.
காலை ஏழரை மணிக்கு குளித்து முடித்து பூஜை ரூமில் உக்கார்ந்தால், சிவ மந்திரம்

"சிவ சிவ என்கிலர் தீவினையாளர் சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்" 
என ஆரம்பித்து, கந்த சஷ்டி முழுவதும் பாட்டாக பாடுவார், அவர் பாடுவது அக்கம் பக்கம் வீட்டுக்கு கேக்கும். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பூஜை செய்வார். அந்த நேரத்தில் என்னையும், தம்பியையும் பூஜையில் உக்கார வைத்து பார்த்தார்கள். நாங்கள் ரெண்டு பெரும், பூஜையில் வைத்து கொடுக்கும் கல்கண்டு, திராட்சையை உத்து பாத்துகொண்டு இருப்போம். அப்புறம், நாங்க பூஜையில் கவனம் செலுத்துவதில்லை என் தெரிந்தபின், பூஜைக்கு அழைக்க மாட்டார்கள். ஆனால் பூஜை முடிந்ததும் கல்கண்டு, திராட்சை மட்டும் தவறாமல் கிடைக்கும் (இன்று வரை).

ஐயாவிடம், பயம் அதிகம் இருந்த படியால், அவர் நடமாடும் பொழுது, மரம் ஏறி மாங்கா பறிக்கறது, இந்த மாதிரி வேலை எல்லாம் பாக்கறதில்லை(ஐந்தாவது படிக்கும் பொழுது). ஆனா பூஜையில் இருந்தால் அந்த ஒரு மணி நேரம்..ஆட்டம் தான். ஐயாவின் பாட்டு தான் சிக்னல், பாட்டு சுரம் குறைய குறைய, பூஜை முடியும் நேரம் தெரிந்து,  அப்படியே சீட்ல வந்து உக்காந்து படிக்க ஆரம்பிச்சுடுவோம்.

அன்று அப்படி தான் மரம் ஏறிய சுவாரசியத்தில், பாட்டை கோட்டை விட்டு விட்டோம். பூஜை முடிந்ததும், நீர் விழாவிய, தண்ணிரை செடியிலொ, மரத்திலோ ஊற்றுவார்கள், அன்னைக்குன்னு பார்த்து, மாமரத்தில் மேலே ஊற்ற வர..மரத்தில் நானும், என் தம்பியும்.."ஐயோ" அப்படியே பக்கத்துக்கு வீட்டு மாடிக்கு தாவலம்னு பாத்தா, காலு எட்டல.."கடவுளே மேல பாக்காம தண்ணி உத்தகூடாதான்னு " நினைக்கங்காட்டியும், பாத்துட்டாக.

அம்புட்டுதான்.."வாங்க இங்க ரெண்டு பெரும்" கூப்புட்டாக..பெண் பிள்ளைகள் எங்கள அடிக்க மாட்டக. எப்பொழுதும், அண்ணன் தம்பிக்குத்தான் அடி விழும்..ஆனா அன்னைக்கு நான் மரம் ஏறியதுக்கு முதுகுல டின்னு கட்ட போராகன்னு பயந்துக்கிட்டே போனேன்"

ஹாலுக்கு போனதும், என் தம்பிக்கு ஒரு அடி முதுகுல, அப்படியே ஓடி போய் பயபுள்ள புத்தகத்த, தலை கீழ புடிச்சு(*நான் சிக்னல் குடுத்தத கவனிக்காம) படிக்க ஆரம்பிச்சுது, அதுக்கு ஒரு அடி.அப்புறம் என்ன எனக்கு அடி விழுந்துச்சான்னு? ரொம்ப சந்தோசமா, நீங்க படிக்கற மாதிரில்ல தெரியுது.

ஐயா, என் சடைய புடிச்சு இழுத்தாக, அம்புட்டுதான், கால சூட ஏதோ நனைச்சுது, குனிஞ்சு பார்த்தா, டான்க் பர்ஸ்ட் ஆயிடுச்சு. என்ன சிரிக்குறீங்களா!..நீங்க எங்க ஐயா கிட்ட இருந்த என்னல்லாம் வெடிச்சு இருக்குமோ? தெரியுமா?

நல்ல வேலை அடி விழழ. அப்புறம் அந்த கர்மத்த, நானே கழுவனும்னு சொல்லிபுட்டாக."பொம்பள புள்ள, கை கால் உடைஞ்சா உன்னைய எவன் கட்டுவான்னு" கேட்டாக.  அம்புட்டுதான், அப்புறம் மரம் ஏறுவது இல்லை.

ஐயா, நாங்கள் தேர்வு எழுதும் பொழுதெல்லாம் இந்த பாடலை தவறாமல் நினைவூட்டுவார்.

"மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார்
கருமமே கண்ணாயி னார் "
(குமரகுருபர சுவாமிகள் நீதிநெறி விளக்கம்)

பொருள்:
தம் உடம்பின் வருத்தத்தைக் கவனியார், பசியையும் கவனிக்காமல், கண்ணுறங்ங்காமல்,  யார் தீங்கு செய்தாலும் அதைப்பொருட்படுத்தாமல்  பிறர் செய்யும் அவமதிப்பையும் கருதாமல் தன குறிக்கோளை மட்டும் நினைப்பவர், வாழ்வில் முன்னேற்றம் அடைவர்.

எங்கள் வீட்டில் அனைவருமே ஓரளவு நன்றாக படித்தோம்.
எனக்கு வேலைக்கு போகும் எண்ணம் எல்லா சுத்தமாக இல்லை.

ஆனா ஐயாவுக்கு நான் Civil Service தேர்வாகி IAS or IPS ஆகணும்னு நினைத்தார்கள்(அவர் கனவு நிறைவேற வில்லை என்பதால் இருக்கலாம்)

 +2 குரூப் 1, கணிதம் ,அறிவியல் தேர்ந்தெடுத்து தேர்வாகியும் , +2 முடித்ததும், என்னை வரலாறு முக்கிய பாடமாக, எடுத்து கல்லுரி படிப்பை தொடர சொன்னார்கள். Group-1 முக்கிய பாடம் வரலாறு எடுத்தால் சுலபமாக இருக்கும்னு ஐயா நினைத்தார்கள்

ஐயா ஆசைப்படி, நானும் B.A(வரலாறு ) மட்டும் விண்ணப்பித்து இருந்தேன்(தஞ்சை குந்தவை நாச்சியார் கல்லூரியில்)

நான் இப்ப என்னவா இருக்கேன்னு, என்னைய பற்றி தெரிந்தவர்களுக்கு தெரியும். தெரியாத  நீங்கள் தாயுமானவன்-3 தொடரவும். ஹி ஹி
6 கருத்துகள்:

  1. பாடலும் பொருளும் அருமை... நினைவூட்டும் ஐயாவிற்கு நன்றி...

    ஐயாவின் ஆசைகள் விரைவில் நிறைவேறட்டும்... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. Your style of post starts with tint of Mu Va, cresendos into Madurai vernacular and ends with a more pragmatic contemporary tamizh. Unusual but cherishable combo though ... we want more of it !! Please continue

    பதிலளிநீக்கு