வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018

கலைஞர் கருணாநிதி


இன்று ஏராளமான கவிஞர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், கல்வியாளர்கள் போன்றோர் கட்சிக்கு அப்பாற்பட்டு கலைஞரை நேசிப்பததற்கு காரணம் அவர் வகித்த பதவி கிடையாது. அவரது பண்பும், பாசமும்தான். அதேபோல, ஆட்சி நிர்வாகம், ஸ்தாபன முதிர்ச்சி, தொலைதூரப் பார்வை, எவ்வளவு பிரச்சினையாக இருந்தாலும் எளிதில் கையாளும் திறமை, மாற்றாரின் கடும் விமர்சனங்களையும் சகித்து கொள்ளும் பக்குவம் போன்ற அனைத்தும் கருணாநிதிக்கு உரியவை.

அவர் பொன் மொழிகளும், அதற்க்கு அவர் உதாரணமாக இருந்ததும், உங்கள் பார்வைக்கு..
முடியுமா நம்மால் என்பது தோல்விக்கு முன்புவரும் தயக்கம். "முடித்தே தீருவோம்" என்பது வெற்றிக்கான தொடக்கம்." 
திருக்குவளை கிராமத்தில் ஓர் ஏழை குடும்பத்தில் பிறந்த கலைஞர் கருணாநிதி மனதில் எப்போதும் துணிவும் நம்பிக்கையும் கொண்டு வாழ்ந்து வந்ததால்தான் அவர் கால் பதித்த அனைத்து துறைகளிலும் வெற்றி கண்டார். "முடித்தே தீருவோம்" என்ற துணிவு இருந்ததால் தான் திராவிட முன்னேற்ற கழகம் என்ற ஒரு கட்சியை நிறுவி, இன்றும் என்றும் அதன் தாக்கம் தொடர வழிவகுத்தவர். 


"துணிவிருந்தால் துக்கமில்லை. துணிவில்லாதவனுக்கு தூக்கமில்லை."
இதுவும் அவரின் தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் காட்டும் அவரது மேற்கோள்தான். தன் அரசியல் வரலாற்றில்தான் நின்ற தொகுதியில் தோற்றதாக சரித்திரமே இல்லை. அவர் துக்கமில்லாமல் துணிவோடு வெற்றித் தலைவனாக வலம் வந்தார் என்பதற்கு இந்த ஒரு செய்தி போதுமே.

புத்தகத்தில் உலகத்தை படித்தால் அறிவு செழிக்கும்; உலகத்தையே புத்தகமாக படித்தால் அனுபவம் தழைக்கும்."
உலகத்தையே புத்தகமாக படித்தவர்களில் கலைஞரை விட திறமைசாலிகள் எவரேனும் உளரோ? மற்றவர்களைப் படிப்பதிலும் கணிப்பதிலும் சிறந்து விளங்கியதால் மட்டுமே கலைஞர் இத்தனை வருடங்கள் வெற்றித் தலைவராக வலம் வர முடிந்தது.

"சிரிக்கத் தெரிந்த மனிதன்தான் உலகத்தின் மனிதத் தன்மைகளை உணர்ந்தவன்."
வார்த்தை விளையாட்டுகள் மூலம் நகைச்சுவை கொண்டு வருவதில் கலைஞருக்கு நிகர் கலைஞரே. தனது உடல்நிலை நலிவடைந்து மருத்தவ சிகிச்சைக்கு மருத்துவரிடம் வந்தபோது கூட, மருத்துவர் அவரை மூச்சை இழுத்து விட  சொல்ல.. "மூச்சை விட்டு விட கூடாது என்றுதான் இங்கு வந்தது" என்று நகைச்சுவையாக பேசியதாக கூறப்படுகிறது. அவர் திரைக்கதை வசனங்களில் வரும் நகைச்சுவை சிரிக்க மட்டுமில்லை சிந்திக்கவும் வைத்தது என்பதில் சந்தேகமில்லை. சட்டப்பேரவைகளில் சிரிப்பலைகளை ஏற்படுத்துவதிலும் வல்லவர். 

இதுபோன்று அவர் நமக்கு விட்டுச்சென்ற பாடங்கள் நிறைய...

சமயோசிதமும் நகைச்சுவை உணர்வும்தான் கலைஞர் கருணாநிதியின் அடையாளம்.
அதிநுட்பமான திறமையைத் தன்னகத்தே கொண்ட தலைவர் கலைஞர்தான். பத்திரிகையாளர்களின் சந்திப்பின்போது அவர் அளித்த நகைச்சுவையான பதில்கள் இவை. கலைஞரின் பதில்கள் ஒவ்வொன்றும் துப்பாக்கியிலிருந்து வெளிவரும் தோட்டாவாக வந்தது சிறப்பு! 
 (நன்றி - விகடன்)
கேள்வி: ``அம்மையார் ஜெயலலிதா சென்னையில் அமர்ந்துகொண்டே காணொலிக் காட்சி மூலம் தமிழகமெங்கும் கட்டடங்களைத் திறந்து வைக்கிறாரே?''
பதில் : ``ஸ்ரீரங்கத்தில் இருந்துகொண்டு சொர்க்கவாசலைத் திறந்துவிட்டோம் என்கிறார்களே... அதுபோல நினைத்துக்கொள்ள வேண்டியதுதான்!''
 கேள்வி: ``சட்டமன்றப் பேச்சுக்கும் பொதுக்கூட்டப் பேச்சுக்கும் என்ன வித்தியாசம்?’’
பதில் : ``மனக்கணக்குக்கும் வீட்டுக்கணக்குக்கும் உள்ள வித்தியாசம்.’’
 கேள்வி: ``செவ்வாயில் தண்ணீர் இருப்பதாக விஞ்ஞானிகள் சொல்கிறார்களே?''
பதில்: ``செவ்வாயில் இருந்தால் அது உமிழ்நீர். தண்ணீர் அல்ல.''
 கேள்வி : ``விவாதம்-வாக்குவாதம்-விதண்டாவாதம் மூன்றும் எப்படி இருக்க வேண்டும்?''
பதில் : ``விவாதம்-உண்மையாக இருக்க வேண்டும். வாக்குவாதம்-சூடு இருந்தாலும், சுவையாக இருக்க வேண்டும். விதண்டாவாதம்-தவிர்க்கப்பட்டாக வேண்டும்.''
 கேள்வி: ``கோழி முதலா, முட்டை முதலா?''
பதில் :``முட்டை வியாபாரிகளுக்கு முட்டையும், கோழி வியாபாரிகளுக்கு கோழியும்தான் முதல்.''
 கேள்வி: ``இளம் மாணவர்கள் அரசியலில் ஈடுபடலாமா?''
பதில் : ``இளம் வயதில் அரசியல் என்பது அத்தைப்பெண் போல. பேசலாம், பழகலாம். சுற்றிச் சுற்றி வரலாம். ஆனால், தொட்டு மட்டும் விடக்கூடாது!''
 கேள்வி: ``தலையில் முடி கொட்டியது குறித்து எப்போதாவது வருந்தியிருக்கிறீர்களா?''
பதில்: ``இல்லை. அடிக்கடி முடிவெட்டிக்கொள்ளுவதற்கு ஆகும் செலவு மிச்சமென்று மகிழ்ந்துதான் இருக்கிறேன்.''
 கேள்வி: ``தலைக்கவசம் அணிவதை கட்டாயமாக்கும் அரசு ஆணையைத் தள்ளிப்போடவேண்டுமென்று சிலர் கோரிவருகிறார்களே..?'' 
பதில்: ``தலையில் ஒன்றும் இல்லையென்றால் தள்ளி வைக்கலாம்.''
 கேள்வி: ``உங்களுக்குப் பிடித்த சட்டமன்றப் பேச்சாளர்?''
பதில் : ''எந்த மன்றமானாலும் சரி, அங்கே கொடிமரம் போல் உயர்ந்துநிற்கும் ஆற்றல்மிகு பேச்சாளர் அறிஞர் அண்ணாதான்''
  கேள்வி: ``சட்டமன்றத்துக்கு உள்ளே போகும்போது என்ன நினைப்பீர்கள்?''
பதில் : ``கற்றுக்கொள்ளும் மாணவனாகவும் கற்பிக்கும் ஆசிரியராகவும் இருக்க வேண்டுமென்று.''
 கேள்வி: ``நினைவாற்றல், சொல்லாற்றல், வாதத்திறன்-ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு எது முக்கியம்?''
பதில் : ``நினைவாற்றலுடன்கூடிய வாதத்திறன்மிக்க சொல்லாற்றல் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் முக்கியம்.''
 கேள்வி : ``கேள்வி கேட்பது எளிதா, பதில் சொல்வது எளிதா?''
பதில் : ``பதில் சொல்ல முடியாத கேள்வி கேட்பது எளிதல்ல.''
 கேள்வி : ``தி.மு.க. ஆட்சி இரண்டு முறை (1976 மற்றும் 1991) டிஸ்மிஸ் ஆனபோது என்ன நினைத்தீர்கள்?''
பதில் : ``பதவியைத் தோளில் போட்டுக்கொள்ளும் துண்டு என்றும், மக்களுக்காக ஓடியாடி உழைப்பதே சிறந்த தொண்டு என்றும் எண்ணியிருப்பவனுக்கு ஆட்சிக் கலைப்பு என்பது ஒன்றும் பெரிதல்ல.''
கேள்வி:  ``உங்கள் வீட்டில் மதுரை ஆட்சியா... சிதம்பரம் ஆட்சியா?
பதில்: ``கலைஞர் ஆட்சி!''
 கேள்வி : ``உங்கள் அமைச்சரவையிலே உள்ளவர்களில் மனதிலே இடம் பெற்ற சிலரை வரிசைப்படுத்துங்களேன்?''
பதில் : ``மனதிலே இடம் பெற்ற பிறகுதானே, அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கிறார்கள். மந்திரிசபையில் இடம் பெறாதவர்கள் என் மனதில் இடம் பெறாதவர்கள் அல்ல.''
**************************************
இந்தச் சூரியன் இன்னும் ஒளிவீசும் நம் உள்ளத்தில்.
ஓய்வெடுக்காமல் உழைத்தவன்...இதோ ஓய்வெடுக்கிறான்"  
இனி கலைஞர் கருணாநிதி என்பது வரலாறு! 

வீழ்வது நாமாயினும் வாழ்வது தமிழாகட்டும்